கொழும்பு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்ததையடுத்து இது போன்ற டெஸ்ட் போட்டிகளை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய அணித் தலைவர் தோனி கிண்டலடித்துள்ளார்.நேற்று கொழும்பில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 1478 ரன்கள் குவிக்கப்பட்டு அதில் 17 விக்கெட்டுகளே 5 நாட்களில் விழுந்தது. இது போன்ற டெஸ்ட் போட்டிகளுக்கான ஆட்டகக்கள தயாரிப்பு குறித்து ஆங்காங்கே கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இது குறித்து கருத்து கூறிய தோனி:
`இது போன்ற ஆடுகளங்களில் 99.9 சதவீதம் முடிவு கிடைக்காது. ஆடுகளம் சவால் அளிக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். போட்டி அளிக்கக்கூடிய ஆடுகளம் என்றால், அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் சாதகமாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. பந்து நன்கு எகிறிச் செல்லும் வகையில் இருக்க வேண்டும்' என்றார்.
ஆட்டம் சமநிலை ஆவது 4-வது நாளிலேயே உறுதி ஆகி விட்டதால், ஒரு நாளுக்கு முன்பாக 4-வது நாளிலேயே டிராவில் முடித்திருக்கலாமா? என்று கேட்ட போது, அப்படி ஒரு யோசனை வந்திருந்தால் அதை நான் நிராகரித்திருக்க மாட்டேன் என்று தோனி பதில் அளித்தார். அவர் மேலும் கூறுகையில்:
கூடுதலாக ஒரு நாள் ஓய்வு கிடைப்பது எங்களுக்கு விருப்பம் தான். இது போன்ற ஆடுகளங்களில் இதுவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் தான். இது பற்றி நடுவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்சில் விளையாடியது. இதன் பிறகு கடைசி நாளில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. எனவே ஒரு நாளுக்கு முன்கூட்டியே முடித்திருக்கலாம்.
பொதுவாக இந்திய துணை கண்டத்தில் உள்ள ஆடுகளம் மாறும் தன்மை கொண்டதாக இருக்கும். முதல் நாளில் இருந்தே இந்த நிலையை பார்க்க முடியும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் `ரிவர்ஸ் ஸ்விங்' செய்ய முடியும்.
ஆனால் இந்த சலனமற்ற ஆடுகளத்தில் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால் 2-வது இன்னிங்சில் ஆடுகளத்தன்மை கொஞ்சம் மாறி இருந்தது. இதனை எங்களது சுழற்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர்' என்றார். |